Nithiyaananthai Naadu – நித்தியானந்தத்தை நாடு
பல்லவி
நித்தியானந்தத்தை நாடு – பர
நிர்மல சுகந்தேடு மனமே
அனுபல்லவி
சத்திய மார்க்கந்தனிலே கூடு
சற்சன சங்கத்தினோடுறவாடு
1. இந்திர ஜாலம் உலக வைபோகம்
இன்றைக்கிருப்பதுவோ – சந்தேகம்
அந்தர மின்னல்போல் அழியும் இத்தேகம்
ஐயோ! அதனுடனுனக்கென்ன சிநேகம் – நித்
2. தன தானிய முதலான சம்பத்து
சாஸ்வதமோ? அதற்காயிரந் தத்து
தினமும் கவலைகள் விளைத்திடும் வித்து
சீச்சீ அதனை விரும்பல் விபத்து – நித்
3. மெய்யே ஒன்றுக்கு முதவாத பாண்டம்
மிருகாதிகள் சூழ் மாமிசப் பிண்டம்
மெய்யே இதற்கிங்கு நித்திய கண்டம்
புண்ணியன் பாதமுனக் காயிரம் தண்டம் – நித்
4. காண்பதெல்லாம் நிலை அல்ல அநித்யம்
காய மிறந்திட வேண்டு மகத்தியம்
வீண் பொருள் மீதுனக் கென்ன பைத்தியம்?
வேதாகமமே சொல்வது சத்தியம் – நித்