Aa Ennil Nooru Naavum – ஆ என்னில் நூறு வாயும் நாவும்
1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்
இருந்தால், கர்த்தர் எனக்கு
அன்பாகச் செய்த நன்மை யாவும்,
அவைகளால் பிரசங்கித்து,
துதிகளோடே சொல்லுவேன்,
ஓயா தொனியாய்ப் பாடுவேன்.
2. என் சத்தம் வானமளவாக
போய் எட்டவேண்டும் என்கிறேன்;
கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக
என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;
ஒவ்வொரு மூச்சும் நாடியும்
துதியும் பாட்டுமாகவும்.
3. ஆ, என்னில் சோம்பலாயிராதே,
என் உள்ளமே நன்றாய் விழி;
கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே
கருத்துடன் இஸ்தோத்திரி;
இஸ்தோத்திரி, என் ஆவியே,
இஸ்தோத்திரி, என் தேகமே.
4. வனத்திலுள்ள பச்சையான
எல்லா வித இலைகளே,
வெளியில் பூக்கும் அந்தமான
மலர்களின் ஏராளமே,
என்னோடேகூட நீங்களும்
அசைந்திசைந்து போற்றவும்.
5. கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்
கணக்கில்லா உயிர்களே,
பணிந்து போற்ற உங்களுக்கும்
எந்நேரமும் அடுக்குமே;
துதியாய் உங்கள் சத்தமும்
ஓர்மித் தெழும்பி ஏறவும்.