Aaruthal Adai Manamae – ஆறுதல் அடை மனமே
ஆறுதல் அடை மனமே
பல்லவி
ஆறுதல் அடை, மனமே;-கிறிஸ்துவுக்குள்
ஆறுதல் அடை, மனமே.
அனுபல்லவி
பாருள் பாவத்தால் வந்த பலனாம் மரண மதின்
கூரை அழித்த யேசு கொற்றவன் றனை நோக்கி. – ஆறு
1. நம்பிக்கை யற்றோரைப் போலே,-மரித்தோர்க்காக
நலிவதேன் ஒருக்காலே;
உம்பர் கோன் மேகத்தின் மேலே-தோன்றிடும் போ
துயிர்த்தெழும்புவ தாலே,
வெம்பிப் புலம்பி அழ வேண்டாம்; கிறிஸ்து வெனும்
தம்பிரான் திருமொழிச் சாரத்தை ருசிபார்த்து. – ஆறு
2. ஜீவ நதிகள் ஓடுமே;-எருசலேமில்
திரளாய் ஜனங்கள் கூடுமே;
தேவ துதியைப் பாடுமே;-யேசுகிறிஸ்தின்
ஜெயத்தைச் சொல்லிக் கொண்டாடுமே;
ஆவலுடனே நாமும் அதையே அடைவதற்கு
ஜீவ வசனந் தன்னைத் திடனாய்ப் பிடிப்போமாக. – ஆறு
3. எண்ணம் கவலைகள் உண்டாம்;-மரித்தோர்க்காக
ஏக்கம் பெருமூச்சும் உண்டாம்;
கண்ணீர் சொரிவதும் உண்டாம்;-துயரம் மிஞ்சிக்
கலங்கி அழுவதும் உண்டாம்;
அண்ணல் கிறிஸ்துவும் முன் எண்ணிக் கண்ணீர் விட்டார்,
நண்ணி அவரை ஜெபம் பண்ணித் துயரைவிட்டு. – ஆறு
4. யேசுவைப் பற்றின பேர்கள்-மரித்தும் உயிர்த்
தெழுந்து புறப்படுவார்கள்;
மாசற்ற தேவன் அவர்கள்-உடனிருக்க
மகிமை பெற்றிருப்பார்கள்;
பேச வேண்டுமோ? யேசு ராசன் சமுகமதில்
நேசமுடன் என்றைக்கும் வாசம் செய்வார்கள் அல்லோ? – ஆறு