Mahizhchi Oiyvunaalae – மகிழ்ச்சி ஓய்வுநாளே
1. மகிழ்ச்சி ஓய்வுநாளே
பூரிப்பு ஜோதியாம்
கவலை துக்கம் போக்கும்
மா பாக்கிய நல்நாளாம்
மாந்தர் குழாம் இந்நாளில்
சேர்ந்தே ஆராதிப்பார்
மா தூயர் தூயர் தூயர்
திரியேகர் பணிவார்.
2.முதலாம் சிஷ்டி ஜோதி
இந்நாளில் தோன்றிற்றே
தம் சாவை வென்று மீட்பர்
இந்நாள் எழுந்தாரே
தம் ஆவி வெற்றி வேந்தர்
இந்நாளில் ஈந்தாரே
ஆ! மாட்சியாம் இந்நாளில்
மூவொளி வந்ததே.
3.இப்பாழ் வனாந்தரத்தில்
நீ திவ்விய ஊற்றேயாம்
உன்னின்று மோட்சம் நோக்கும்
பிஸ்கா சிகரமாம்
ஆ! எம்மை முசிப்பாற்றும்
நல் அன்பாம் நாள் இது
மண்ணின்று விண்ணில் ஏற்றும்
புத்துயிர் நாள் இது.
4.செல்வோம் புத்தருள் பெற்று
இவ்வோய்வு நாளிலே
மெய்பக்தர் மோட்ச லோக
மா பாக்கிய ஓய்வுக்கே
பிதா சுதன் சுத்தாவி
எம் ஸ்தோத்ரம் பெறுவீர்
சபையின் நாவால் கீதம்
திரியேகரே ஏற்பீர்.